சொல்லாமல் சன்யாசம் கொள்..!

FamilyDramaWomenShort-Stories
Aug 07, 2026
Listen to storyNarrated by VITI
LightDark
0:00 / 0:00
Read this story in
Tamil

வேகமாக ஓடிக்கொண்டிருந்த அந்த பேருந்து மதிய வேளை என்பதால் கொஞ்சம் காலியாகத்தான் இருந்தது. ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணிக்கு 50+ வயதிருக்கலாம்..

அருகில் வந்த கண்டக்டரிடம் கையை நீட்டி கோடி எனக் கேட்டு பயணச்சீட்டு வாங்கியவர் மீண்டும் ஜன்னல் பக்கம் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க..

பார்க்கும் காட்சிகள் மட்டுமல்ல எண்ணங்களும் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன..

என்ன வாழ்க்கை இது? நான் இதுவரை வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கை தானா? வாழ்க்கையில் மூன்று நிலை. பெற்றவர்களோட வாழறது ஒண்ணு, கட்டினவனோட வாழறது ரெண்டாவது, பெத்த பிள்ளைகளோட வாழறது மூணாவது..

இந்த மூணு நிலை எந்த நிலையிலாவது நான் சந்தோஷமா இருந்தேன்னு யோசிச்சா ஒரு நாள் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே?

அப்பா, அம்மாக்கு மூணாவதும் பொண்ணான்னு சலிப்போடவே வளர்த்து, எப்படியோ கிடைத்த இடத்துல தள்ளினா போதும்னு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டி வச்சாங்க.

வந்த இடத்துலயோ தான் விரும்பினது கிடைக்காத விரக்தியில வேண்டா வெறுப்போடவே கடமைக்கு குடும்பம் நடத்தின கணவன்..

ஒரே பையன். அவனுக்கும் ஏனோ அப்பா உங்க அம்மா ஒரு தண்டம்னு சொல்றதை கேட்டு கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, என்னிக்குமே அன்பா பேசினதில்ல, என் வார்த்தையை மதிச்சதில்ல..

இப்ப வீட்டுக்கு மருமகளும் வந்து, பேரையும் பிறந்த பிறகு வேலைக்காரி, இல்ல இல்ல கொத்தடிமைக்கும் கீழா தன் நிலை மாறிப்போனதை நினைச்சி நினைச்சி வெறுப்பின் உச்சத்தில் இருந்தாள் அவள் செல்ல நாயகி..

பேருக்கு ஒண்ணும் குறைச்சலில்ல என்று எண்ணிக் கொண்டவள்..

இந்த வாழ்க்கையில் இவங்களால சந்தோஷமா இருந்திடுவோம், அவங்களால சந்தோஷமா வாழ்ந்திடுவோம்னு நினைச்சுக்கெல்லாம் போதும். நமக்கான சந்தோஷத்தை நாம தான் தேடிக்கணும்.. புருஷன், பையன், குடும்பம் யாரும் வேணாம், எங்கயாவது கண் காணாத ஊர்ல நாலு வீட்ல வேலை செஞ்சா சுயமரியாதையோட வாழ்ந்துடலாம்..

இப்படி பலதையும் எண்ணியபடி எண்ணங்கள் ஓட, எண்ணத்துடன் பேருந்தும் ஓடி இருக்க, கோடி பேருந்து நிலையம் வந்து சேர்ந்திருந்தது..

பேருந்தை விட்டு இறங்கி மெட்ரோ ரயில் பாதையினால் குறுகலாகி, அந்த குறுகலும் இரு பகுதிகளாக டிவைடரால் பிரிக்கப்பட்டிருந்ததில் நெரிசல் அதிகமாகிப் போன சாலையை இருபுறமும் பார்த்து, பார்த்து வேகமாக கடந்து கோடி வீதிக்குள் நுழையும் போதே.. இப்பவே இப்படி இருக்கே, மாலை, இரவு நேரத்தில் எப்படி இருக்குமோ என்று எண்ணியபடி நிமிர்ந்து நோக்க..

வீதியின் அந்தக் கடைசியில் கம்பீரமாக தெரிந்த கோயில் கோபுரத்தை பார்த்தபடி நடக்கத் தொடங்கினாள் செல்ல நாயகி..

கையில் உள்ளங்கையில் அடங்கக் கூடிய ஒரு சின்ன பர்ஸை தவிர எதுவுமில்லை. மொபைலைக் கூட வேண்டுமென்றே எடுத்து வரவில்லை. அது இருந்தா தானே போன் பண்ணி கூப்பிடுவாங்க? தேடட்டும், தேடட்டும், நான் இல்லன்னா தான் என் அருமை தெரியும். பாசத்துல தேடலன்னாலும் வீட்டு வேலை செய்யவாவது தேவுங்க இல்ல? இப்படி பலதும் எண்ணியவாறே கோயிலுக்குள் நுழைந்த செல்ல நாயகி..

சிறிய வயதில் பெரிய கொண்டாட்டங்கள், எங்கேயும் சினிமா என்றோ பீச் என்றோ சென்றதில்லை. அதிகபட்சம் அவளின் சந்தோஷம் இந்தக் கோயில் மட்டும் தான்... இங்கேயே இந்தக் கோயில்லேயே இருந்துடலாமா? அமைதிப்பாங்களா தெரியலையே? என்ன பண்ணலாம்? வெளியே பிள்ளையார் கோயில் வாசலிருக்கே, அங்கே தங்கலாமா? இப்ப டைம் என்ன இருக்கும்? நைட் ஆகட்டும் பார்த்துக்கலாம் என தன்னையே சமாதானம் செய்து கொண்டவள்..

அருகில் இரண்டு பேர் கடந்து செல்கையில் பேசிய வார்த்தைகள் காதில் விழுந்தது..

அம்மாவை தரிசிக்கவும் முற்படவில்லை. தியாகராஜரை தரிசிக்கவும் செல்லாமல்... பெரிய மேடை மேல் அண்ணாந்து, படர்ந்து வளர்ந்திருந்த மகிழ மரத்தடிக்கு சென்றாள். சின்னஞ்சிறு சிறுமியாய் ஓடி விளையாடிய இடம் இந்த கோவிலும் மரத்தடியும்..

பழுப்பு நிறத்தில் குட்டி குட்டி குரியனாய் மண்ணில் விழும் மகிழம் பூவை தேடி தேடி சேகரிப்பது அன்றைய விளையாட்டாக இருந்தது.. இப்ப அப்படி செய்ய உடம்பு ஒத்துழைக்காதே என எண்ணியபடி வசந்த மண்டபத்தில் அமர்ந்து, காற்றில் பக்கத்தில் உதிரும் மகிழ மலர்களை பார்த்தவாறே.. மனம் அந்த நாட்களை எண்ணி சந்தோஷம் கொண்டு,

"அம்மாவை பார்த்துட்டு சீக்கிரம் கிளம்பணும் சகுணா, நேரமாயிடுச்சு.." என ஒரு பெண்மணி சொல்ல..

"கோயில்ல கூட நிம்மதியா இருக்க மாட்டியா? கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாமே?" என மற்றொரு பெண்மணி சொல்ல..

"எங்கடி நேரமிருக்கு? பாப்பு ஸ்கூல்லருந்து வந்துடுவான், வரும்போதே பசியோன்னு வருவான்.. சாப்பிட்டு குழந்தை டியூஷனுக்கு ஓடணுமே..!?" என்ற பதிலில் பேரன்பாக பரிதவிக்கிறார் என உணரும் போதே..

வீட்டில் பேத்தி ஸ்கூல்லருந்து வருவாளே? அச்சோ குழந்தை என்ன சாப்பிடுவா? என மனம் பதை பதைக்க வீட்டிற்கு செல்ல வேக வேகமாய் நடக்கத் தொடங்கிய செல்ல நாயகி..

சொல்லாமல் மட்டுமல்ல, சொல்லிவிட்டுக் கூட பெண்களால் சன்யாசம் போக முடியவில்லை என்பதை எண்ணியபடி நடந்தாள்..

Join the Discussion

User Image
Amutha Vijaykumar
1 weeks ago

மிக்க நன்றி