அனலும் புனலும் அவள்!

DramaCrimeWomenMotivationalShort-Stories
Aug 23, 2026
Listen to storyNarrated by VITI
LightDark
0:00 / 0:00
Read this story in
Tamil

பேருந்திலிருந்து இறங்கி நடக்கலானாள் ரேவதி. மனதிற்குள் போக வேண்டிய கடைகள், வாங்க வேண்டிய பொருட்கள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டாள்.

இதே தி நகர் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பேருந்தில் வந்து இறங்கியது மனதில் நிழலாடியது. அவளுக்கு முன்னே நின்றிருந்த அந்தப் பெண் - அவள் பெயரென்ன? மறந்துவிட்டது. அவள் நெளிவும் விலகலும் கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீருமாய் இருந்தது மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது.

பாவம்... எங்கு போகிறவளோ? இங்கே பஸ் நின்றதும் அவசரமாக, தப்பித்து ஓடுபவளைப் போன்று இறங்கி வெகுவேகமாக நடந்தாள். அவள் பின்னால் கேலிச் சிரிப்போடு தொடர்ந்தவனைப் பார்த்தபோது ரேவதிக்கு விஷயம் புரிந்தது.

சில விநாடிகளிலேயே அவளை எட்டிப் பிடித்துவிட்டான் அவன். மீண்டும் அவன் சில்மிஷங்கள் தொடர்ந்தன. பாவம், அந்தப் பெண் அவனிடமிருந்து தப்பிக்க அரும்பாடுபட்டாள். ஒரு கட்டத்தில் அவள் நகர்ந்து நடுச்சாலைக்கு வந்துவிட்டதையும் பேருந்து ஒன்று உறுமிக் கொண்டு அருகில் வந்துவிட்டதையும் கண்ட ரேவதி திடுக்கிட்டாள். விநாடிக்கும் குறைவான நேரத்தில் அவளைத் தன்னருகில் இழுத்துக் காப்பாற்றினாள். ஆனாலும் கையில் பேருந்து தேய்த்து ரத்தக் காயம் பட்டிருந்தது. மெதுவாக அவளை எழுப்பி முதலுதவி செய்ய முனைந்தாள்.

இப்போது அவன் ரேவதியை வெறித்தான். அவசரமாக மார்க் போட்டுக் கொண்டிருந்தான் என்று புரிந்தது.

"அட! உன்னை ஃபாலோ பண்ணியிருக்கலாம் போலிருக்கே! சினிமா ஸ்டார் மாதிரி இருக்கியே," என்றான் அலட்சியமாக.

ரேவதி அமைதியாக அவனைப் பார்த்தாள். கை மெதுவாகச் செருப்பைக் கழற்றியது.

அடுத்த விநாடி, அங்கே ஒரு போர் அரங்கேறியது. பெண்ணைத் தாயாக அல்ல, சகோதரியாக அல்ல, தோழியாக அல்ல, சக மனுஷியாகக் கூடப் பார்க்காத மிருகத்தின்மீது செருப்பு சடேர் சடேரென்று இறங்கியது. போலீஸ் வந்து அவனை இழுத்துப் போனார்கள்.

அன்று ரேவதி வீட்டுக்குத் திரும்பியபோது அவளுக்காக ஒரு பெரியவரும் ஒரு அம்மாளும் காத்திருந்தார்கள். அவனைப் பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

"அம்மா! என் மகளா நினைச்சு உன்னிடம் இந்த உதவியைக் கேட்கிறேன். இந்தக் கேஸை விட்டு விலகிடும்மா! தயவுசெய்து என் பையனுக்கு எதிராகச் சாட்சி சொல்லாதே. உனக்கு ஏதேனும் பணம் வேணும்னாலும் கொடுக்கறோம்..." எரித்து விடுவதுபோல் அவர்களைப் பார்த்த ரேவதியின் உஷ்ணப் பார்வையைக் கண்டதும் பெரியவர் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அந்த அம்மாள் பேச ஆரம்பித்தாள்.

"தாயே! என் மகன் பண்ணியது பெரிய தப்புத்தான். அதற்காக நாங்க உன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கறோம். இந்தக் கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி நாங்க கேட்கிறது அவனுக்காக இல்லைம்மா! என் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணம். இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அது நின்னுடும்.

"என் மகனால பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் பெயர் வெளியே வரக்கூடாதுன்னு நினைக்கறா. நீ சாட்சி சொல்லலேன்னா கேஸ் ட்ராப் ஆகிடும். என் மகளும் உன் மாதிரி ஒரு பொண்ணுதான். அவ வாழ்க்கையைக் காப்பாற்றும்மா! அவளை நினைச்சுக்கிட்டு எனக்கு மடிப் பிச்சை போடு," என்றாள் அழுதவாறே.

ரேவதி இறுக்கமாக அவர்களைப் பார்த்தாள்.

"உங்க பொண்ணைப் பற்றி நான் நினைக்கறது இருக்கட்டும். அவளை ஒரு நிமிஷம் நினைச்சிருந்தா உங்க பையன் இன்னிக்கு லாக்கப்ல இருக்கமாட்டான். நீங்க மற்ற பெண்களை உங்க மகளா நினைச்சிருந்தா நீங்களும் இப்படி என் முன்னாடி உட்கார்ந்திருக்க மாட்டீங்க," என்று சொல்லிப் பேச்சைக் கத்தரித்து எழுந்துவிட்டாள்.

அவர்கள் அழுதுகொண்டே போனது, கோர்ட்டில் அவன் அவளை முறைத்துக் கொண்டேயிருந்தது, தீர்ப்பு வந்ததும் "வருவேண்டி! ஜெயில்லேர்ந்து திரும்பி வருவேன்! உன்னைப் பழிவாங்குவேன்!" என்று வெறிபிடித்த மாதிரி அவன் அலறியது எல்லாம் நினைவில் ஊர்வலம் போக, உடல் சிலிர்த்தது ரேவதிக்கு.

அப்போது யாரோ அவள் முடியைப் பிடித்து இழுத்து இறுக்கினார்கள். யாரது கையில் கத்தியோடு? ஐயோ, அவன்!

"ராட்சஸி! என் வாழ்க்கையை, என் தங்கச்சி வாழ்க்கையை எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டியே! பெரிய போலீசாடி நீ? இல்ல ஜான்சி ராணின்னு நினைப்பா? எவன் எந்தப் பொம்பளையைப் பார்த்தா உனக்கென்னடி? உன்னை அவமானப்படுத்திக் கதறக் கதறக் கத்தியால் குத்திக் கொல்லப் போறேன். உனக்காக எந்தப் பொம்பளை வரான்னு பார்க்கறேன்! எவளுக்குத் தடுக்கத் தில்லு இருக்குன்னு பார்க்கறேன்!" ஆவேசமாய் அலறினான் அவன்.

"எனக்குத் தில்லு இருக்கு. அவங்க மேல கையை வெச்சே, உன் கையை வெட்டிடுவேன்!" என்று உறுமியவாறு அவர்கள் அருகில் வந்தாள் ஒரு பெண்.

அவன் அலட்சியமாக அவளை ஏறிட்டான். அடுத்த விநாடி அவன் கையிலிருந்த கத்தி கீழே நழுவியது.

"தங்கச்சீ!" என்று கத்தினான். "உன் வாழ்க்கையை அழிச்ச இந்தச் சனியன் பிடிச்சவளையா காப்பாற்றப் பார்க்கற?"

"அடச் சீ! இன்னொரு வார்த்தை அவங்களைப் பற்றி ஏதாவது பேசினே, நீ கொண்டுவந்த கத்தியாலேயே உன்னைக் கூறு போட்டுடுவேன்! என் வாழ்க்கையை அழிச்சது இவங்க இல்லடா, நீதான்! இவங்க சொன்ன மாதிரி, ஒரு நிமிஷம் என்னை நினைச்சிருந்தா இந்த மாதிரிச் செஞ்சிருப்பியாடா? என் கல்யாணம் நின்னு போச்சாம்! உனக்கு என்ன தெரியும்? மூணு வருஷத்துக்கு முன்னாடி அவங்களுக்கும் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. இந்தப் பிரச்சனையிலே அவங்க துணிஞ்சு தலையிட்டதால அவங்க கல்யாணமும் நின்னு போச்சு, தெரியுமாடா?

"இப்போ நீ வீட்டுக்குப் போனா, நம்ம அம்மா உன்னைக் கைவிட மாட்டாங்க! நீதான் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையாச்சே! நாலு வார்த்தை திட்டிட்டு, வீட்டோட சேர்த்துப்பாங்க! ஆனா உன்னை மாதிரிப் பாவியைத் தைரியமா எதிர்த்த இவங்களோட அம்மா, அப்பாவே இவங்களை வெறுத்து ஒதுக்கிட்டாங்க! மூணு வருஷமா பேச்சு வார்த்தை கிடையாது!

"பொம்பளைங்களோட வாழ்க்கையில் விளையாடற உன்னைப் போன்ற மிருகங்களுக்கு உன்னோட கதை ஒரு பாடமா அமையணும்னு இவ்வளவு பெரிய தியாகம் பண்ணின இவங்க, நம்ம குடும்பத்தையும் மறக்கல. நீ ஜெயிலுக்குப் போயிட்டதால தவிச்சுக்கிட்டிருந்த நம்ம குடும்பத்தை அவங்க சம்பளத்தைக் கொண்டு பராமரிச்சுக்கிட்டிருக்காங்க. அரும்பாடுபட்டு எனக்கும் ஒரு வரன் பேசி முடிச்சிருக்காங்க. அதற்குப் புடவைகள், மற்ற சாமான்கள் வாங்கத்தான் இங்கே வந்திருக்காங்க. நான் ஆஃபீஸ் முடிஞ்சு அவங்களோட சேர்ந்துக்கறதா ஏற்பாடு. நல்லவேளை நான் சீக்கிரம் வந்தேன்.

"இனி எந்தக் காலத்திலும் என் முகத்திலேயே முழிக்காதே! நீ எனக்கு அண்ணனுமில்ல, நான் உனக்குத் தங்கையுமில்ல. எந்த உறவும் கொண்டாடிக்கிட்டு என் கல்யாணத்துக்கு வந்துடாதே!"

பொரித்துக் கொட்டிவிட்டு "வாங்க ரேவதி" என்று சொல்லி நடந்தாள் அவன் தங்கை. "என்னை மன்னிச்சுடுங்க ரேவதி" என்று நடுரோட்டில் அழுதவாறே காலில் விழுந்த அவனை இருவருமே லட்சியம் செய்யவில்லை.

ரேவதிக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. துளிர்க்காமலே கருகிவிட்ட தன் வாழ்வை எண்ணியல்ல - தூர்த்தர்களால் துன்பத்திற்குத் தினம் தினம் ஆளாகித் தவிக்கும் பெண்களை நினைத்து. மனித மிருகங்களிடம் மாட்டிக் கொண்டு மானத்தையும் உயிரையும் இழக்கும் அப்பாவிகளை நினைத்து.

ரேவதிகள் – இருண்ட வானில் தியாக ஒளி வீசும் கடைசி நம்பிக்கை நட்சத்திரங்கள்.

Join the Discussion