பாரதியும் பலூன்காரனும்

நகரத்தில் ஒரு பூங்கா. பொன்மாலைப் பொழுது.
அந்தப் புல்லாங்குழல் ஒலி மறுபடி கேட்க ஆரம்பித்திருந்தது. மனதைக் கவர்வதாய், மனதைப் பிசைவதாய்… என்ன மந்திர ஒலி அது? என்ன செய்கிறது நம்மை? சிரிக்க வேண்டும்போல்… அழ வேண்டும்போல்… அமைதியாய் அமர வேண்டும்போல்… ஆடிப் பாடி விளையாட வேண்டும்போல்…
எங்கிருந்து வருகிறது இந்த ஒலி?
அதோ, அங்கே மாமரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறான் பலூன் விற்பவன். அவன்தான் குழலூதுகிறான்.
குழந்தைகள் எல்லாம் அவனைச் சுற்றிக் கொள்கின்றன. “மாமா, பலூன்! பலூன் தாங்க! சிவப்பு, பச்சை…” ஒரே கூப்பாடு.
“நான் பலூன் விக்கலே குழந்தைகளா!” என்கிறான் அவன்.
“அதானே வெச்சிருக்க? உள்ளே கலர்கலரா தெரியுதே! அங்கே பாரு, முகம், நிலா…
“…வானத்தில் பறக்கிறவங்க…”
“…பெரிய வீடு…”
“…சூட்டு போட்டுட்டு… யாரு?”
“நீதான்!” என்றான் பலூன்காரன். குழந்தை ஓரடி பின்னால் போனது.
“பலூன் வேணுமா? உங்க கனவு அதில் இருக்கு! வாங்கிக்கிட்டா, நிஜமாயிடும்! இலவசமில்ல, பலூனுக்கான விலையைக் கொடுக்கணும்!” என்றான் பலூன்காரன்.
“எனக்கு இந்த மாமாவைப் பார்த்தா பயமாயிருக்கு!” என்றது ஒரு குழந்தை.
“ஆமா! கன்னங்கரேல்னு…” ஓடியது இன்னொன்று.
“எனக்கு இந்தப் பலூன் வேணாம்! அதில் என்னவோ லைட்டெல்லாம் வருது, பயமா இருக்கு!” என்று சொல்லிச் சென்றது ஒரு குழந்தை.
பாரதிக்கும் அவனைப் பார்க்கப் பயமாகவே இருந்தது. ஆனாலும் அந்தப் பலூன்கள் அவளை இழுத்தது.
“வா பாப்பா! உனக்குப் பலூன் வேணுமா?” என்று அழைத்தான் அவன்.
“உங்கிட்ட பலூன் வாங்கினா கனவு பலிக்குமா? எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை! பெரிய ஹாஸ்பிடல் இருக்கணும், பலபேர் வியாதிகளைக் குணம் ஆக்கணும், எங்க அப்பாவை இப்போ புகழறாங்களே, நன்றி சொல்றாங்களே, அந்த மாதிரி எனக்கும் சொல்லணும்னு…”
பலூன்காரன் ஒரு சிவப்புப் பலூனை நீட்டினான். அதிலிருந்து ஒளி வரும், காட்சிகள் தெரியும் என்றெல்லாம் எதிர்பார்த்தாள் பாரதி. ஆனால் அதுவோ மிகச் சாதாரணமாக இருந்தது.
“இதில் ஒண்ணும் மேஜிக் இல்லையே? ரொம்பப் பெரிசா கூட இல்லை” என்று குறைப்பட்டாள்.
“இந்தா, இன்னும் கொஞ்சம் ஊது, பெரிசாயிடும்” என்று சொல்லி அவள் ஊதியதும் நீண்ட நூல் கட்டிக் கொடுத்தான். சின்னச் சின்ன மின்மினிகள் பறப்பதுபோல் அதனுள் மெல்லிய வெளிச்சம் இப்போது மினுங்கியது.
தட்டித் தட்டி பாரதி சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கையில் அவள் அம்மா வந்தாள்.
“ஏதுடா பலூன்?”
“அந்த மாமா கொடுத்தாரும்மா!” கைகாட்டினாள் பாரதி.
அங்கே யாரும் இல்லை.
மறுநாள் பாரதியின் அப்பாவுக்கும் அவருடைய மாமனாருக்கும் பெரிய சண்டை. கண்டபடி திட்டிவிட்டுப் போய்விட்டார்.
பாரதிக்கு தாத்தா போய்விட்டதில் ரொம்ப வருத்தம். அவர்தானே அவளை டாக்டருக்குப் படிக்க வைப்பதாகச் சொல்லியிருந்தார்?
பலூன் மிதந்து வந்தது. விளையாடியவாறு சீக்கிரமே சண்டையை மறந்து போனாள்.
சில வருஷங்களில் வீடு மாறினார்கள். தன் ஆஸ்பத்திரிக்காக வாங்கிய கடனுக்காக அப்பா வீட்டை விற்றுவிட்டார்.
பாரதி ப்ளஸ்-டூ சேர்ந்ததும் ஒருநாள், அவள் அப்பா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார், உயிரில்லாத உடலாகத் திரும்ப வந்தார்!
ஆஸ்பத்திரி விற்கப்பட்டது. குடும்பம் தெருவில் நின்றது. இவள் டாக்டராவது இருக்கட்டும், அவள் பரீட்சையே எழுதவில்லை.
அவள் அம்மா ஏதோ வீட்டில் நர்ஸ் அட்டெண்டண்ட்டாகச் சேர்ந்தாள். இவளுக்கு ஒரு ஜவுளிக் கடையில் கணக்கெழுதும் வேலை!
“அந்தப் பலூன்காரன் கிடைச்சான்னா அவனைத் தாறுமாறா கிழிக்கறேன்” என்று பல்லைக் கடிப்பாள்.
அவன் கண்ணில் படவில்லை. ஆனால் தலைக்குமேல் சிவப்புப் பலூன் பறப்பதுபோலவே தோன்றும். மனது வலிக்கும்போதெல்லாம் குழலொலி கேட்பதுபோல் இருக்கும். வாழ்க்கை கைவிட்டு நழுவும்போதெல்லாம் கறுப்பு நிழல் ஒன்று முன்னே போகும்.
முப்பத்தைந்து ஆண்டுகள். ஊரே மாறிவிட்டது. ஆனால் பூங்கா இன்னும் இருக்கிறது. அந்த மாமரமும்…
அடப்பாவி! இன்னும் இங்கேதான் இருக்கிறான்! குழல் வாசித்துக் கொண்டு… குழந்தைகள் அருகே வர…
பாரதி ஓடினாள். “இவர்கிட்ட யாரும் பலூன் வாங்காதீங்க! ஏமாத்துக்காரரு!” என்று கத்தினாள்.
அவன் நிமிர்ந்தான். “நான் என்னம்மா உன்னை ஏமாத்தினேன்?” என்று கேட்டான். அவளை அவனுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது!
“கனவுகளை நிறைவேத்தற பலூனா இது? டாக்டராவேன்னு நம்பி வாங்கிட்டுப் போனேனே!” ஆற்றாமை தாங்காமல் அழுகை வந்தது பாரதிக்கு.
“நல்லா யோசிச்சுப் பாரு! பெரிய ஆஸ்பத்திரி இருக்கணும்… பலருடைய வியாதி தீர நீ காரணமாகணும்… பல குடும்பங்களைக் காப்பாத்தணும் – அதுதானே உன் கனவு? அது நிறைவேறிச்சா இல்லையா?”
பாரதி விதிர்த்தாள். ஏழு ஜவுளிக்கடைகளின் முதலாளினி. போன வருடம் நகரின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றை வாங்கி, முழுக்க முழுக்க இலவச மருத்துவம் நடக்க வழிசெய்திருக்கிறாள்.
“உன் அப்பாவைவிட அதிகமாக உன்னைப் புகழறாங்க!”
கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பாரதி “அது நல்ல பலூன், ஆனா உடைஞ்சிட்டது” என்றாள்.
“யார் சொன்னா? இதோ இருக்கு பாரு!” என்று எடுத்துக் காட்டினான். சிவப்புப் பலூனின் உள்ளே பறந்த மின்மினி ஒளிகள் ஒன்று சேர்ந்து வானில் கிளம்பின. அடுத்த விநாடி வானில் புதிய நட்சத்திரம் ஒன்று ஒளிவிட்டது. “இதோ உன் வெற்றி ஒரு நட்சத்திரமாகிடுச்சு! இனி அது மற்றவங்களுக்கு வழி காட்டும்!”
“இங்கே என்னம்மா பண்ணிட்டிருக்கீங்க?” வாட்ச்மேன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
“பலூன்காரனோடு பேசிட்டிருந்தேன்…”
“பலூன்காரனா? எங்கேம்மா?”
மரத்தடி காலியாக இருந்தது. பாரதி அங்கிருந்து நகர்ந்தாள்.
“வருஷங்களா இங்கே எந்தப் பலூன்காரனும் வந்ததில்லையே!” வாட்ச்மேன் சொல்வதைக் கேட்டவாறே மரத்தடியை ஏறிட்டாள் பாரதி.
அவன். தயக்கத்துடன் அருகே நெருங்கிய ஒரு குழந்தைக்குப் பலூனை நீட்டிக் கொண்டிருந்தான்.
‘நீ யாரென்று எனக்குத் தெரியாது மகளே! ஆனால் சில ஆண்டுகளில் வானில் ஒரு புது நட்சத்திரம் உயரும். அதை எனக்கு அடையாளம் தெரியும்!’

Join the Discussion
Neelesh Vishwakarma
4 days agoReally beautiful story. 🙏