வியந்தாள் வினிதா!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.
ஒரே ஹேண்ட் லக்கேஜ் மட்டும் கொண்டுபோனால் போதும் என்று அமேசானில் வாங்கிய புது மாடல் பையில் திணறத் திணறச் சாமான்களை அடைத்திருந்ததால் அது மௌனமாகக் கதறிக் கொண்டிருக்க, ஸ்பீக்கரில் விமானம் பற்றிய அறிவிப்பைச் சத்தமாக எப்போது கதறுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் வினிதா. அவள் கையில் அவளைவிட்டு எப்போதும் பிரியாத கிண்டில். அதில் வழக்கம்போல் ஒரு மர்மக்கதை.
தான் வேலை பார்க்கும் சென்னையிலிருந்து தாய்தந்தையர் இருக்கும் மும்பைக்குப் பிரயாணம் செய்யப் போகிறாள். அங்கிருந்து… திருமண வாழ்வு என்ற அடுத்த பிரயாணம் தொடங்கலாம், யார் கண்டது?
மெல்லிய புன்னகையுடன் கனவு காண ஆரம்பித்தாள் வினிதா. ‘மிஸ்டர் ஹஸ்பண்ட்!’ அவனைக் கற்பனையாக உருவகம் செய்ய முயன்றாள். தன்னை அவன் வேலையில் தொடர விடுவானா, இல்லை சமைத்துப் போடு என்பானா? தன்னுடைய ஹாபியான துப்பறியும் மர்மக்கதைகள், ட்ரூ க்ரைம் எல்லாம் படிக்க முடியுமா அல்லது எம்ப்ராய்டரி போட்டு, ஸ்வெட்டர் பின்னி…
மேடிட்ட வயிறுடன், உல்லன் நூல்கொண்டு குழந்தைக்கு சாக்ஸ் பின்னுவது போன்ற ஒரு காட்சி மனதில் தோன்ற, சிரித்துக் கொண்டாள்.
மும்பை விமானத்திற்கான போர்டிங் அறிவிப்புக் கேட்டதும் எழுந்தாள் வினிதா. அவளுடைய பையை எடுத்துக் கொண்டு நகர முயன்றபோது, ஒரு பெண் தட்டென்று அவள்மீது மோதி வேகமாக நகர்ந்தாள். வினிதா நிலைதடுமாறி இருக்கையிலேயே விழுந்தாற்போல் அமர்ந்தாள்.
“சே!” என்று வெறுத்தபோதுதான் கவனித்தாள், இடித்த பெண்ணின் கைப்பை கீழே விழுந்து திறந்துகொண்டு, அதிலிருந்த மொபைல் மற்றும் மேக்கப் சமாச்சாரங்கள் சிதறுவதை.
“நல்லா வேணும்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும், “ஓ அடடா! லெட் மீ ஹெல்ப்” என்று முன்வந்து, சிதறிய பொருட்களைப் பொறுக்குவதில் உதவினாள் வினிதா.
“சாரி, கொஞ்சம் அவசரம்” என்று இப்போதுதான் அந்தப் பெண்ணுக்குச் சொல்லத் தோன்றியது.
‘உங்க அவசரத்துக்கு ப்ளேன் முன்னாடி கிளம்புமா?’ என்று நினைத்துக் கொண்ட வினிதா, தான் எடுத்த பொருட்களை அவளிடம் திரும்பத் தந்தாள். அப்போதுதான் அவள் முகத்தைச் சரியாகப் பார்த்தாள் வினிதா.
‘நீ… நீயா!’ வியந்தாள் வினிதா.
*****
“உங்க பேரு?”
“வினிதா.”
“மிஸ் வினிதா, இன்றைக்கு நீங்க மும்பை விமான நிலையத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தீங்க. அவளை நீங்க ஏற்கெனவே பார்த்திருக்கறதால, உங்க பயணத்தையே கேன்சல் செஞ்சிட்டு, எங்க சதுரா துப்பறியும் நிறுவனத்திற்கு வந்திருக்கீங்க. அப்படி அந்தப் பெண் யாரு? உங்களை எந்த விஷயத்திலாவது ஏமாற்றிட்டு ஓடினவளா?” என்று கேட்டாள் தன்யா.
வினிதா விழித்தாள். “இ… இல்லை” என்றாள்.
“அப்போ அவ விஷயத்தில் உங்களுக்கு என்ன இவ்வளவு இண்டரஸ்ட்?” என்று கேட்டாள் தன்யா.
வினிதா எழுந்தாள். “இதையேதான் போலீஸும் கேட்டாங்க. இன்னும் என்னென்னவோ கேட்டாங்க” என்றாள்.
“வாட்? நீங்க போலீஸுக்குப் போனீங்களா?” என்று நோட்ஸ் எடுப்பதை நிறுத்தி, ஆச்சரியத்துடன் கேட்டாள் தர்ஷினி.
“யெஸ்…” என்றாள் வினிதா பெருமூச்சுடன்.
“சொல்லுங்க” என்றாள் தன்யா.
“சரியா ஒரு வாரம் முன்னாடி, அதாவது போன சனிக்கிழமை, நான் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸுக்குப் போயிருந்தேன். அந்த ஹாலில் ப்ரைவேட் பாக்ஸஸ் இருக்கு. அதில் மூணாவது பாக்ஸ் எனக்கு ஒதுக்கியிருந்தாங்க. என் ஃப்ரெண்டோட மகள்தான் நாட்டியம் ஆடினது…
“நான் தெரியாம இருட்டில் ஒரு பாக்ஸை எண்ண விட்டுட்டு, நாலாவது பாக்ஸுக்குப் போயிட்டேன். அங்கே ஒரு பெண் இருந்தா…”
“அவதான் நீங்க பார்த்த ஏர்போர்ட் பெண், இல்லையா?”
“ஆமா.”
“மேலே சொல்லுங்க.”
“அந்தப் பெண் நான் தவறான பாக்ஸுக்கு வந்ததைச் சுட்டிக் காட்டினதும், நான் ஸாரி சொல்லிட்டு என் பாக்ஸுக்குப் போயிட்டேன். பெர்ஃபார்மன்ஸ் முடிஞ்சு நான் கிளம்ப இருந்தேன். அநேகமா அங்கிருந்த எல்லாரும் போயிட்டாங்க. அப்போ மேலிருந்து ஒரு அலறல் சத்தம் கேட்டது. நானும் டான்சரோட அப்பாவும் சத்தம் கேட்ட இடத்துக்கு ஓடினோம். அங்கே… இந்தப் பெண் இறந்து கிடந்தா!”
“வாட்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் தன்யா.
“ஆமா மேடம், நான்தான் அடையாளம் சொன்னது. போலீஸ் விசாரணையில் அவளைப் பற்றி எதுவுமே கண்டுபிடிக்க முடியல. அவ எப்படி டான்ஸ் பெர்ஃபார்மன்ஸுக்கு வந்தா, எதுக்காக வந்தா ஒண்ணும் புரியல. ஒருவேளை அவ ஒரு ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்டா இருக்கலாம்னு சொன்னாங்க. அவளைப் பற்றி எதுவுமே தகவல் தெரியல.”
“அவளோட ஃபோட்டோ இதுக்குள்ள பேப்பரில் வந்திருக்குமே, யாராவது அடையாளம் சொல்லியிருப்பாங்களே, இல்ல அவகிட்ட ஏதாவது ஐடி?” என்று கேட்டாள் தன்யா.
வினிதாவை முந்திக் கொண்டு தர்ஷினி பதில் சொன்னாள். “இல்லை தன்யா. இந்தக் கேஸ் நான் பேப்பரில் பார்த்தேன். ‘ஸ்டேஜ்க்குப் பின்னால் ட்ராமா’ன்னு டைட்டில் கொடுத்துச் செய்தித்தாள்களில் வந்திருந்தது! அந்தப் பெண்ணுடைய முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணை அடையாளம் காட்டுமுகமாக எதுவுமே அங்கே கிடைக்கலை, ஒரே ஒருவருடைய வாக்குமூலத்தைத் தவிர! அதுதான் நீங்க, இல்லையா மிஸ் வினிதா?”
“ஆமா” என்றாள் வினிதா. “நான் ரொம்பக் கேட்டுக்கிட்டதால, அதோட ஃபேமிலி, ஆஃபிஸ், இவங்க எல்லாரோட இன்ஃப்ளூயன்ஸ் காரணத்தால, என் பெயர் எந்தப் பத்திரிகையிலும் வெளியே வரல்லை.”
“முகம் சிதைக்கப்பட்டிருந்ததா? ஏன்?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் தன்யா.
“கட்டையால் தாக்கியிருக்காங்க. முகத்தில் பட்டிருக்கு” என்றாள் வினிதா அருவெறுப்பாக.
“அப்போ, தாக்கப்பட்டது யாருன்னு நீங்க எப்படி அடையாளம் காட்டினீங்க?” என்று கேட்டாள் தன்யா.
“உடை, பொதுவாக உடல் அமைப்பு, உயரம் இதெல்லாம் வெச்சுத்தான்” என்று பதிலளித்தாள் வினிதா.
தன்யா உதட்டைக் கடித்தாள். “ஆனா, மரணமடைந்த அந்தப் பெண்ணை நீங்க ஏர்போர்ட்டில் பார்த்ததா சொல்றீங்க, இல்லையா?” என்று கேட்டாள்.
“ஆமா” என்றாள் வினிதா.
“போலீஸ் என்ன சொல்றாங்க?”
“சொல்றாங்க! பாக்ஸ் ரூம்ல அந்தக் குறைந்த வெளிச்சத்தில் நான் பார்த்த முகம் எதுன்னு சரியா அடையாளம் சொல்ல எப்படி முடியும்? அவங்களேதான் நான் ஏர்போர்ட்டில் பார்த்தவங்கன்னு எப்படி நிச்சயமா சொல்ல முடியும்? சின்ன வித்தியாசங்களோடு பல முகங்கள் இருக்கலாம், ஏன் உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருக்கலாம்…”
“மை காட்! இன்னுமா இந்த ஏழு பேர் கதையைச் சொல்லிட்டிருக்காங்க, அதுவும் போலீஸ்!” என்று வியப்புடன் சொன்னாள் தன்யா.
“அவங்க அப்ரோச் பிடிக்காமதான் உங்களைத் தேடி வந்தேன் மேடம். எனக்குக் கண்பார்வைக் குறைபாடு உண்டா, ஐடில வேலை செய்யறதால டிப்ரஷன் ப்ராப்ளம் இருக்கா - இன்னும் என்னெல்லாமோ கேட்கறாங்க!” வினிதா வருத்தத்துடன் கூறினாள்.
“இவ்வளவுதூரம் போலீஸ் உங்க வாக்குமூலத்தை அலட்சியம் செய்ய என்ன காரணம்?” தர்ஷினி யோசித்தாள்.
“தர்ஷினி, நாம் முதலில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்போம். அதற்குள் அச்யுத்தை அனுப்பி, இன்றைக்கு மீனம்பாக்கத்தில் இருந்து ப்ளேனில் பிரயாணம் செஞ்ச பயணிகளின் லிஸ்ட் கலெக்ட் பண்ணச் சொல்லு” என்றாள் தன்யா.
*****
மறுநாள் தன்யா, தர்ஷினியை மீண்டும் சந்தித்தாள் வினிதா.
“சொல்லுங்க, எதுக்காக என்னை வரச் சொன்னீங்க? மேலும் ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?” என்று கேட்டாள்.
“வாங்க வினிதா, எல்லாம் விவரமா சொல்றேன். கையில் என்ன கட்டு?” என்று கேட்டாள் தன்யா.
“ஒண்ணுமில்ல, எங்க ஹாஸ்டல் லாபியில் எண்ணெய் சிந்தியிருந்தது. அதில் வழுக்கிக் கீழே ஸைடா விழுந்து, கையால் தடுக்கப் பார்த்து, கட்டக்! ஃப்ராக்சர்! எங்கப்பா எந்த நேரத்தில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாரோ, ஒரே தடங்கலும் விபத்துமா நடக்குது” என்றாள் வினிதா எரிச்சலாய்.
“ஸாரி அபவுட் தட். இந்தாங்க நீங்க தேடுகிற பெண்ணுடைய டீடெயில்ஸ்” என்று ஒரு ஃபோல்டரை நீட்டினாள் தர்ஷினி.
“நீங்களே சொல்லிடுங்களேன்” என்றாள் வினிதா.
“பேர் ராகவி. ஊர் தாம்பரம். இங்கே பீச் ரோடில் இருக்கும் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் செக்யூரிட்டிஸ் பாங்கில் வேலை. நீங்க பார்த்த அன்று ஆஃபீஸ் வேலையாகத்தான் மும்பை போயிருந்தா. வேலைல ஜாயின் பண்ணி மூணு மாதம் ஆகுது, அக்மார்க் அனாதை” என்றாள் தர்ஷினி.
“ஐ… ஸீ” என்றாள் வினிதா.
“இன்னொருதரம் அவளைப் பார்த்துடுங்களேன், நீங்க பார்த்த பெண் அவளான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கலாமே” என்றாள் தர்ஷினி.
“ஓகே” என்றாள் வினிதா தயக்கமாக.
*****
“குட்மார்னிங்! சாரி, விடுமுறையன்னிக்குத் தொந்தரவு கொடுக்கறோம்” என்றாள் தன்யா, வீட்டுக் கதவு திறந்ததும்.
“குட்மார்னிங்” என்ற அந்தப் பெண்ணின் முகத்தில் சந்தேகம் தெரிந்தது.
“சாரி, நீங்க…”
“எதுவும் விற்கெல்லாம் வரலை, பயப்படாதீங்க! ஜஸ்ட், இவங்க உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. நாங்க அவங்களோட வந்திருக்கோம், தட்ஸ் ஆல்” என்றாள் தன்யா.
முன்னால் வந்த வினிதாவைப் பார்த்ததும் அவள் கண்களைச் சுருக்கினாள். “சாரி, உங்களை எங்கே பார்த்திருக்கேன்? ஓ, ஏர்போர்ட்டில் மோதிக்கிட்டோம் இல்லை? நான் ஏதாவது கீழே விட்டுட்டேனா, திரும்பக் கொடுக்க வந்திருக்கீங்களா? என் அட்ரஸ் எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?” என்று இயல்பாய்க் கேட்டாள்.
“உங்க மெமரியைத்தான் திரும்பக் கொடுக்க வந்திருக்காங்க! மறந்திட்டீங்களா, இவங்களை நீங்க முன்னாடி சந்திச்சிருக்கீங்களே! போன வாரம் சனிக்கிழமை, டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்ல வெச்சு…” என்று தன்யா சொல்லிக் கொண்டுபோக, “ஸாரி, நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலை” என்றாள் ராகவி.
“மிஸ் ராகவி, அன்றைக்கு நான்கூட பாக்ஸ் மாறி வந்துட்டேன், நீங்க வழிகாட்டினீங்களே” என்றாள் வினிதா.
“ஐ ஆம் சாரி, நீங்க யாரோன்னு நினைச்சுக்கிட்டுப் பேசறீங்க! நான் அன்றைக்கு டான்ஸுக்கெல்லாம் போகவே இல்லை! இன் ஃபாக்ட், என்னிக்குமே போனதில்லை!” என்றாள் ராகவி.
வினிதா குழம்பியவளாகத் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டாள். “சாரி, நான்தான் தப்பா பார்த்திருக்கேன் போல” என்றாள்.
“நெவர் மைண்ட். ஒய் டோண்ட் யூ கம் இன் அண்ட் ஹேவ் ஸம் காஃபி?” என்று கேட்டாள் ராகவி.
“நோ தேங்க்ஸ்” என்று சொல்லி விடைபெற்றார்கள் மூவரும்.
*****
“என்ன வினிதா, சட்னு ஸேம் சைட் கோல் போட்டுட்டீங்க?” என்று அங்கலாய்த்தாள் தன்யா. “இன்னும் கொஞ்சம் விசாரிச்சிருந்தா…”
“என்ன கிடைக்கப் போகுது? நான் பார்த்தது இவளைத்தான்னா, அங்கே இறந்து கிடந்ததும் இவள்தானே? அது எப்படிச் சாத்தியம்?” என்று கேட்டாள் வினிதா. “போலீஸ் சொன்ன மாதிரி நான்தான் இருட்டில் ஏதோ…”
“இருங்க வினிதா. அவங்க சொன்னது, போலீஸ் சொன்னது எல்லாம் மறந்துடுங்க. உங்க கண்களை மூடிக்கிட்டு நீங்க பாக்ஸில் பார்த்த பெண்ணின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவாங்க. அது ராகவியா, இல்லையா?” என்று கேட்டாள் தன்யா.
“எனக்குக் குழப்பமாயிருக்கு” என்று பரிதாபமாய்ச் சொன்னாள் வினிதா.
“அந்த நாலாவது பாக்ஸ் யார் பேரில் புக் செய்யப்பட்டிருக்குன்னு பார்த்தோம். அது ராகவி வேலை பார்க்கிற ஜி ஐ எஸ் பாங்க்கின் தலைவியான நிஷா பஜாஜோட ப்ரைவேட் பாக்ஸ்! அதில் ராகவி எப்படியாவது இடம் பிடிச்சிருக்கலாம். அதைச் சொல்லி அவங்களை மடக்கலாம்னு பார்த்தோம். நீங்க…”
படீரென்று சப்தம். அவர்கள் கார் எக்குத்தப்பாய்ச் செல்ல ஆரம்பித்தது. எதிரே லாரி.
விருட்டென்று ஸ்டீரிங்கைத் திருப்பி, எப்படியோ ரோட்டைவிட்டு நகர்ந்து, ஒரு வீட்டின் காம்பவுண்டில் இடித்து நிறுத்தினாள் தன்யா. இறங்கிக் காரை ஆராய்ந்தாள்.
“டயரில் துப்பாக்கிக் குண்டு பாய்ஞ்சிருக்கு. தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்” என்றாள்.
*****
“ராகவியை அரெஸ்ட் பண்ணியாச்சு. ஆனா அவளை ப்ரூஃப் இல்லாம அங்கே வெச்சிருக்க முடியாது! தன் கூட்டத்தைப் பற்றி எதுவுமே பேச மாட்டேங்கறா. எனக்குத் தெரியாது, தெரியாதுன்னே சொல்றா. அவ இருந்த அனாதை ஆசிரமத் தலைவியும் வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. அவ நல்லவ, ரொம்ப அப்பாவின்னு ஒரே புலம்பல்!” என்றாள் தன்யா.
“அப்படி அவ வாயில் விரலை வெச்சா கடிக்கத் தெரியாதவன்னா, வினிதாவைக் கொல்ல நடந்த அட்டெம்ப்ட் எல்லாம் எதோடு சேர்த்தி?” என்று கோபமாகக் கேட்டாள் தர்ஷினி.
“எக்ஸாக்ட்லி! ஆனா அதையெல்லாம் செய்தவ அவதான்னு எப்படி நிரூபிக்கறது?
“அமெரிக்காவில் இருக்கற ஒரு பெரிய பாங்கோடு ஒப்பந்தம் போட்டு, தன் பிஸினஸைப் பல மடங்கு விருத்தி செய்கிற முயற்சியில் இருந்திருக்காங்க ஜி ஐ எஸ் பாங்கின் தலைவியான நிஷா பஜாஜ்! அதனால் அவங்க அதிகமா பாங்குக்கோ வேறு நிகழ்ச்சிகளுக்கோ வரதே இல்லை! அவங்க தொழில்முறை எதிரிகள் அவங்களைக் கொல்லப் போட்ட அருமையான திட்டம்தான் டான்ஸ் ஹால் சம்பவம்!
“ஜி ஐ எஸ் பாங்க்கில் ராகவியை முதலில் வேலைக்குச் சேர்த்திருக்காங்க. நிஷாவோட செகரட்டரியா இருக்கற அளவு ராகவிக்குப் படிப்பும் இல்லை, திறமையும் இல்லை! ரெகமண்டேஷன்ல சேர்ந்திருக்காங்க…” என்ற தர்ஷினி, தன்யாவின் முகம் சுருங்குவதைக் கண்டதும் நிறுத்தினாள். “என்ன?” என்று கேட்டாள்.
“ஏதோ உறுத்துது நீ இப்போ சொன்னது. போகட்டும், மேலே சொல்லு” என்றாள் தன்யா.
“அவங்க அன்று நாட்டிய நிகழ்ச்சிக்கு வரப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, ராகவி அந்த பாக்ஸில் முன்னாடியே போய் மறைஞ்சுக்கிட்டா. தான் வருவதே யாருக்கும் தெரியாம ப்ரைவேட் வழியா லேட்டா வந்த நிஷாவை லேட் ஆக்கிட்டா ராகவி. அப்புறம் தன் உடைகளை அவளுக்கு அணிவிச்சு, அவ உடைகளைப் போட்டுக்கிட்டு, பூனை மாதிரி வெளியேறிட்டா!
“அவளுடைய திட்டம் வெளியே வந்தே இருக்காது, நிஷா எங்கோ ஓடிட்டாங்கன்னு பேர் வந்து பாங்க் பேரும் கெட்டுப் போயிருக்கும், வினிதாவின் கண்ணில் அவ பட்டிருக்காட்டா! அதுதான் அவ பேட் லக்! அடையாளம் தெரியாம கிடந்த அந்தப் பிணத்திற்கு ஒரு முகம் கொடுத்தா வினிதா. அதே முகத்தை அவளை மறுபடி ஏர்போர்ட்டில் பார்க்க வைத்தது விதி! போலீஸ் இந்தக் கேஸில் அவ்வளவு ஆர்வம் காட்டல. அதனால் நம்மிடம் அவ வந்ததும், அவ பார்த்த முகத்துக்கு ஒரு அடையாளமும் அட்ரஸும் கொடுத்துட்டோம் நாம! அதனால் மாட்டிக்கிட்டா!”
தன்யா முடித்தாள்.
“அப்பாடி! எவ்வளவு தரோவா திட்டம் போட்டிருக்காங்க! நான் மட்டும் ராகவியைப் பார்த்திருக்காட்டா அவ மாட்டியே இருக்க மாட்டா. எவ்வளவு அழகா என்னைப் பார்த்ததே இல்லை, டான்ஸுக்கு வரவே இல்லைன்னு சொன்னா கவனிச்சீங்களா? நானே குழம்பிட்டேன்” என்றாள் வினிதா வியப்பாய்.
“ஏன் குழம்பணும்?” என்றான் தர்மா.
இதுவரை பேசியே இராது, அவள் வரும்போதெல்லாம் நிஷ்டையில் இருக்கும் சித்தர்போல் அமர்ந்திருக்கும் அந்தத் துப்பறியும் நிறுவனத்தின் தலைவன் திடீரென்று பேசியதும் திடுக்கிட்டாள் வினிதா.
“நல்ல கேள்வி. அவள் உண்மைதான் சொல்றாளோன்னு நானும் குழம்பிட்டேன். ஆனா வினிதாவை ஏர்போர்ட்டில் பார்த்ததை அவளால் மறுக்க முடியலை, சாட்சிகள் இருந்ததால” என்றாள் தன்யா.
“அந்த உடலை அடையாளம் காட்டிட்டாங்களா?” என்று கேட்டான் தர்மா.
“கொல்லப்பட்டது நிஷா பஜாஜ்னு தெரிஞ்சவங்க சொல்லிட்டாங்க. சீக்கிரம் ரிப்போர்ட் வந்துடும்” என்றாள் தன்யா.
“யோசிச்சா, நீங்க சொல்ற மாதிரித்தான் சம்பவங்கள் நடந்திருக்கணும்! என்ன பெர்ஃபெக்டா, எந்த ஓட்டையும் இல்லாம, வேறு அபிப்ராயங்களுக்கு இடமே இல்லாம விளக்கிட்டீங்க!” என்று வியந்தாள் வினிதா.
“எனக்கு வேறு அபிப்ராயம் இருக்கே!” என்றான் தர்மா.
எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“சொல்லேன். டிஸ்கஸ் பண்ணினா எது சரின்னு தெரிஞ்சுடும்” என்றாள் தன்யா.
“தேவையில்லை. இன்னும் கொஞ்ச நாளில் ஜி ஐ எஸ் பாங்க்கில் மோசடி நடந்திருக்கறதாகவோ, பாங்க் திவாலாகிட்டதாகவோ செய்தி வருதா பாருங்க. அப்போ என் அபிப்ராயம் சரி” என்று சொல்லி தர்மா அமைதியாக எழுந்து போனான்.
மௌனம். நீண்ட பெருமூச்சுகள்.
“ராகவிக்கு அவங்களே வேலை கொடுத்து…”
“அவளை மாதிரி முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரில மாற்றிக்கிட்டு…”
“அவளை பாக்ஸுக்கு வரச் சொல்லி…”
“கொன்னு, முகத்தைச் சிதைச்சு…”
“நிஷா வந்தாங்க, கொல்லப்பட்டாங்கன்னு ஸ்தாபிச்சு…”
“ராகவி ஐடண்ட்டிட்டியை எடுத்துக்கிட்டு…”
“மோசடி பண்ணின பணத்தோட…”
“ராகவி… இங்கிலீஷ் ஸ்டைல்…”
“ராகவியை பாக்ஸில் வினிதா பார்த்துட்டான்னதால அவளைக் கொல்லப் பார்த்து…”
தன்யாவும் தர்ஷினியும் மாறிமாறிப் பேசி மௌனமானார்கள்.
வினிதா வியந்தாள்.
ஒரு மாதம் கழித்து, செய்தித்தாளில் பொருளாதாரப் பக்கத்தில் வந்திருந்த ஒரு செய்தியைக் கண்டு மீண்டும் வியந்தாள் வினிதா.

Join the Discussion